கட்சியில் இருந்து என்னை நீக்கும் அதிகாரம் பொதுச்சபைக்கு மாத்திரமே உள்ளது: சி.சிவமோகன்

கட்சியில் இருந்து என்னை நீக்கும் அதிகாரம் பொதுச்சபைக்கு மாத்திரமே உள்ளது. அதனை மீறினால் செயலாளருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்வேன் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார்.

வவுனியாவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கட்சியின் யாப்பே அதன் முதுகெலும்பு. அதன் கொள்கைகள் அது பயணிக்கும் வளித்தடம். அந்த அடைப்படையில் ஒரு கட்சியை நிர்மூலமாக்குவதற்கு யாப்பை மீறிசெயற்பட்டால் அதனை முடக்கலாம். இன்று எமக்கான சந்தேகம் இதுவே. 

திருமலையில் கட்சிமீது தொடரப்பட்ட வழக்கின் மூலம் எமது பொதுச்சபையானது முடக்கப்பட்டுள்ளது. அப்போது இனிமேல் யாப்பு மீறல் செய்யமாட்டோம் என்று பேசப்பட்டது. ஆனால் மீண்டும் அதே யாப்பு மீறலை மத்தியசெயற்குழு செய்கிறது என்றால் இதன் நோக்கம் என்ன?.

இந்த பொதுக்குழுவிற்கு எதிராக நீதிமன்ற வழக்குகளை நடத்தியவர்கள் யார் என்பது கண்டுபிடிக்கப்படவேண்டிய விடயம். மத்திய குழுவை அரசியல் மாபியாக்களின் கூடாரமாக மாற்றக்கூடாது. 

கடந்த ஒரு மத்திய குழு கூட்டத்தில் மாவை சேனாதிராஜாவை கதிரையில் இருக்க வேண்டாம் உங்கள் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்ன நபர் மத்திய குழுவிலேயே இல்லாத ஒருவர். நிலமை அவ்வாறே உள்ளது.

இதேவேளை பதில்செயலாளர் என்ற போர்வையில் ஒருவர் இருந்துகொண்டு யாப்பைமீறி செயற்பட்டமையாலேயே இந்த நிலமை ஏற்பட்டுள்ளது. 

இவர்களுக்கு தில் இருந்தால் அந்த வழக்கை மீளப்பெற்று பொதுச்சபை இயங்குவதற்கு இடம்தரவேண்டும். அதைசெய்தாலே மாபியாக்களிடம் இருந்து தமிழரசு கட்சியை மீட்கமுடியும். 

பொதுத்தேர்தலில் முதல்முறை போட்டியிட்ட ஒருவர் சொன்னார் நான் தோற்றால் அரசியலுக்கு வரமாட்டேன் என்று. ஆனால் இரண்டாம் தரமும் தோற்றுவிட்டு தேசிய பட்டியலை பெறும் ஆசையில் இருக்க கூடாது அல்லவா. 

தேசிய பட்டியல் என்பது சமுதாயத்தில் கௌரவமான ஒருவருக்கு வழங்கப்படவேண்டும். ஏறிமிதிச்சாலும் தலையை தூக்கத்தெரியாத நாக்கிளி பாம்புகள், காணிபிடிக்கின்ற மாபியாக்கள், ஜனநாயகமறுப்பை செய்யும் சுயநலவாதிகள் இவர்களே தேசியபட்டியலில் வந்தவர்கள். இதனால்கட்சியை வளர்க்கமுடியுமா. 

கட்சியின் பொதுக்குழு கூடும்போது தேசியபட்டியலை நாங்கள் மீள் பரிசீலனை செய்வோம். கட்சியை மீட்பதற்காக மாத்திரமே நான் போராடுகிறேன். மத்தியகுழு உறுப்பினரை நீக்கும் அதிகாரம் மத்தியசெயற்குழுவிற்கு இல்லைஎன்று கட்சியினுடைய யாப்பின் விதிஏழு கூறுகிறது. அந்த அதிகாரம் பொதுச் சபைக்கே இருக்கிறது.

கடந்த கூட்டத்தை விட்டு நான் வெளியேறிய பின்னர் என் மீது குற்றத்தை முன்வைத்து என்னை இடைநிறுத்தியதாகஅவர்கள் பிரச்சாரம் செய்தார்கள். என்னை நீக்குவதற்கான அதிகாரம் பொதுச்சபைக்கே இருக்கிறது. 

எனவே என்னை நீக்கியமை தொடர்பான உணமைத்தன்மையினை உறுதிப்படுத்தி 72 மணித்தியாலங்களில் பதில் அளிக்குமாறு கோரி பதில் செயலாளருக்கு நான்கடிதம் அனுப்பியிருந்தேன். 

அதன் பிரதிகள் தலைவர் மாவைசேனாதிராஜா,பதில் தலைவர் சிவஞானம், தெரிவுசெய்யப்பட்ட தலைவர் சிறிதரன் ஆகியோருக்கும் அனுப்பியிருக்கிறேன். வெறுமனே வாய்சவாடல்களால் கட்சியின் பதவிகளை பறிக்கமுடியாது. அதற்கென்று ஒழுங்குமுறை உள்ளது. 

கொழும்பான்களின் கூக்குரலுக்கு பயந்தவன் நான் அல்ல. பிள்ளைகளை சிங்களவர்களுக்கு கொடுத்துவிட்டு சிங்களதேசத்துடன் சமரசம் பேசுபவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்காகவா 50ஆயிரம் போராளிகள் மரணித்தார்கள்.

தற்போது இருக்கும் ஒரு கூட்டம் சமஷ்டியை கோரி போராடிய ஒரு கட்சியை புதிய கண்டுபிடிப்புக்கள் மூலம் சமரசம் பேசி உருக்குலைப்பதற்கான பாரியமுயற்சியை எடுக்கிறது. அது நடைபெறாது. 

போர்காலத்தில் புதுக்குடியிருப்பில் எந்தவித வளங்களும் இல்லாமல் இன்னல்களுக்கு மத்தியில் மக்களுக்கான வைத்தியசாலையை நான் நடாத்தியிருந்தேன். நாங்கள் வலிகண்டவர்கள். நீங்கள் எங்கே இருந்தவர்கள். மாவையை கேள்வி கேட்பவர் எங்கே இருந்து வந்தார். 

மக்கள் கொல்லப்படும் போது பால்சோறு உண்டவர்கள் நீங்கள். எமக்கு பதவி தேவையில்லை எந்த நோக்கத்திற்காக அந்த மண்ணில் நாங்கள் நின்றோமோ அந்த நோக்கத்தை உருக்குலைக்க ஒருபோதும் விடப்போவதில்லை.

தங்களது தேசிய பட்டியலை வேண்டிவிட்டு அது குழம்பிவிடக்கூடாது என்பதற்காக அதுவரை பொறுமைகாத்து மாவை சேனாதிராஜாவை தலைவராக மேசையில் இருத்தினார்கள். மாவை ஒரு பதவி விரும்பி அல்ல. ஆரம்பாலத்தில் இருந்து சிறைசென்று கட்சியை வளர்த்த ஒரு தலைவர். அவரை நீங்கள் அசிங்கப்படுத்தலாமா. 

இதேவேளை கட்சியில் இருந்து என்னை இடைநீக்கியதாக கூறப்படும் கடிதம் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை. கிடைத்தால் என்னை நீக்குவதற்கு பதில் செயலாளருக்கு அதிகாரங்கள் ஒன்றும் இல்லை என்று கூறி அவரை உடனடியாக பதவி விலகுமாறு தெரிவித்து நான் வழக்கினை தாக்கல் செய்வேன்.என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *