பொதுத் தேர்தல் வாக்களிப்பில் ஒரேயொரு கட்சியைத் தவிர ஏனைய கட்சிகளின் ஆதரவாளர்கள் ஆர்வம் செலுத்தவில்லை என்பது எமது நடமாடும் கண்காணிப்பின்போது அவதானிக்கப்பட்டது. ஆனால், இது மிகவும் துரதிர்ஷ்டவசமானதாகும் என்று வீவ் தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
ராஜகிரியவில் உள்ள வீவ் தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் தலைமையகத்தில் வியாழக்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பிடுகையில் இம்முறை தேர்தலில் மக்கள் ஆர்வம் காண்பித்துள்ள வீதம் மிகக் குறைவாகவே காணப்படுகிறது. எம்மால் முன்னெடுக்கப்பட்ட நடமாடும் கண்காணிப்பின்போது ஒரேயொரு கட்சியின் ஆதரவாளர்கள் மாத்திரமே ஆர்வத்துடன் வாக்களிப்பதை அவதானிக்க முடிந்தது.
ஏனைய கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் அதனை அவதானிக்க முடியவில்லை. எவ்வாறிருப்பினும் இது துரதிர்ஷ்டவசமான விடயமாகும். சிலரிடம் நாம் இது குறித்து வினவியபோது, எவருக்கும் இதில் ஆர்வமில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனால் குறித்த கட்சிகளும் கவலையடைந்துள்ளமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் சட்டமீறல்கள் இடம்பெற்றுள்ள போதிலும், பாரியளவிலான வன்முறைகள் எவையும் பதிவாகவில்லை. ஆனால் சில பிரதேசங்களில் கட்சி அலுவலகங்கள் நீக்கப்படாமலிருப்பதையும் அவதானிக்க முடிந்தது. எவ்வாறிருப்பினும் கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் அமைதியானதும் சுதந்திரமானதுமான முறையில் இம்முறை தேர்தல் இடம்பெற்றுள்ளது.
225 பேரும் வேண்டாம் என்ற கோஷத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த முறையும் நான் அதனை எதிர்த்திருந்தேன். ஆனால் எமக்கு தவறானவர் எனத் தோன்றுபவர்களை மீண்டும் தெரிவு செய்யாமல் இருப்பதற்கான அதிகாரம் எமக்கிருக்கிறது. எனவே வாக்களிப்பின் போது வாக்காளர்கள் அது தொடர்பில் சிந்திக்க வேண்டும் என்றார்.