ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும், சில தமிழ்க் கட்சிகளுக்கும் இடையில் நேற்றுக் கலந்துரையாடல் நடைபெற்ற நிலையில், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை 9 கட்சிகள் இணைந்து எதிர்கொள்வது என்று தீர்மானித்துள்ளன.
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் சக தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் உள்ளுராட்சித் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்றது.
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் ஏற்கனவே உள்ள, ஈ.பி.ஆர்.எல்.எப்., ரெலோ, புளொட், ஜனநாயகப் போராளிகள் கட்சி, தமிழ்த் தேசியக் கட்சி ஆகிய கட்சிகளுடன் தற்போது தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம், சமத்துவக் கட்சி, ஜனநாயகத் தமிழரசுக் கூட்டமைப்பு என்ற 4 தரப்புகள் புதிதாக இணைந்துள்ளன. இந்தக் கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை இணைந்து எதிர்கொள்வது என்று அவை தீர்மானித்துள்ளன.
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி என்னும் கட்சியின் பெயரில் இணைந்து போட்டியிடுவதுடன், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் சங்குச்சின்னத்தை பொதுவான சின்னமாக அனைவரும் ஏற்றுக்கொண்டு அந்தச் சின்னத்தில் போட்டியிடுவது என்றும், மாவட்ட ரீதியாக யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சி மாவட்டத்திலும் மாவட்டத் தேர்வுக்குழுவை உருவாக்குவது என்றும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.