உயிர் அச்சுறுத்தல் மற்றும் மன அழுத்தம் காரணமாக தனது பதவிவை துறந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி!

குருந்தூர்மலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை தொடர்பாக பல உத்தரவுகளை வழங்கிய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி டி.சரவணராஜா பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

உயிர் அச்சுறுத்தல் மற்றும் மன அழுத்தம் காரணமாக பதவி விலகுவதாக நீதிபதி டி.சரவணராஜா கடிதம் ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி டி.சரவணராஜா தமது பதவி விலகல் கடிதத்தை இன்று நீதிச் சேவைகள் ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளார்.

உயிர் அச்சுறுத்தல் மற்றும் மன அழுத்தம் காரணமாக தனது பதவிவை துறப்பதாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா அறிவித்துள்ளமையானது, நாட்டின் நீதித்துறை எத்தகைய சவால்களை சந்தித்துள்ளது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் தெரிவித்துள்ளார்.

சுயாதீனமாக செயற்பட வேண்டிய நீதிக் கட்டமைப்பை நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி நீதித்துறையை கேலிக்குள்ளாக்கிய ஒருவரது நிலைப்பாட்டுக்கு அமைவாக நாட்டின் சட்டமா அதிபர் திணைக்களமும் செயற்பட்டுள்ளமை அதிர்ச்சியை தருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதவி துறத்தலானது, பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே இலங்கையின் அனைத்து அரச நிறுவனங்களும் செயற்பட வேண்டும் என்ற கடும்போக்குவாதத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது என்றும் அங்கஜன் ராமநாதன் தெரிவித்துள்ளார்.

நீதித்துறையையும் வளைத்துப்போடும் வகையில் சிலர் செயற்படும்போது அதை தடுக்காமல் நீதித்துறைக்கு காவலாக இருக்க வேண்டியவர்களே நீதித்துறையின் சுயாதீனத்தை கேள்விக்குட்படுத்தும் போது, நாட்டின் எதிர்காலம் குறித்த அச்சம் மக்களிடம் உருவாக்குகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கல்கள் தொடர்பில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் பணிப்புரைகளையே மீறிச் செயற்படக்கூடிய தரப்புகள் இந்நாட்டை ஆபத்தான பாதைக்கு இட்டுச் செல்கிறார்கள் என்றும் அங்கஜன் ராமநாதன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *