இலத்திரனியல் பயண அங்கீகார முறைமையை மீண்டும் செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக இலங்கை சுற்றுலாத்துறை குளிர்காலத்தில் வீழ்ச்சியை சந்திக்கலாம் என சுற்றுலாத்துறையை சேர்ந்தவர்கள் எச்சரித்துள்ளனர்.
தற்போதைய விசா நடைமுறை சர்வதேச பயணிகளிற்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளபடி அரசாங்கம் இலத்திரனியல் பயண அங்கீகார முறையை நடைமுறைப்படுத்தாவிட்டால் வீதிக்கு இறங்கப்போவதாக சுற்றுலா தொழில்துறையின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
குடிவரவுதுறையினர் தாங்கள் நடைமுறைப்படுத்தும் சர்ச்சைக்குரிய விஎஸ்எவ் குளோபல் முறைiயை இடைநிறுத்திவிட்டு முன்னையை முறைமையை உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும் இதனை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் சுற்றுலாத்துறைக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ள சுற்றுலாத்துறையை சேர்ந்தவர்கள்,சுற்றுலாப்பயணிகள் கொழும்பு விமானநிலையத்தில் விசாவை பெறுவதற்கு இரண்டுமணித்தியாலங்களிற்கு மேல் செலவிடவேண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையை சென்றடைந்ததும் சுற்றுலாப்பயணிகளிற்கு விசா வழங்கப்படுமா என்பது குறி;த்த சந்தேகம் காரணமாக இலங்கைக்கு செல்லும் பயணிகளை ஏற்றுவதற்கு சர்வதேச விமானச்சேவைகள் தயக்கம் காட்டுகின்றன எனவும் சுற்றுலாத்தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குளிர்காலம் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது,சுற்றுலா தொழில்துறை ஏற்கனவே பலவீனமான நிலையில் உள்ளது,இந்த தாமதங்கள் காரணமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் போக்குவரத்து எச்சரிக்கையை விடுக்கலாம், பிரான்சும் அவுஸ்திரேலியாவும் ஏற்கனவே அவ்வாறான எச்சரிக்கையை விடுத்துள்ளன என இலங்கை ஹோட்டல்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஹிரான் குரே செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
எங்கள் தொழில்துறை தற்போது மோசமான நிலையில் உள்ளது,இது வேதனையளிக்கின்றது ஏனென்றால்,பல வருட சவால்களிற்கு பின்னர் இந்த தொழில்துறையை உயிர்ப்பிப்பதற்கு நாங்கள் கடும் முயற்சிகளில் ஈடுபட்டோம், என மேலும் தெரிவித்துள்ள அவர் அரசாங்கம் சுற்றுலாத்துறையை கையாளும் விதம் இதுவென்றால் இது மிகவும் ஏமாற்றமளிக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஹர்ச இலுக்பிட்டிய மீது சுற்றுலா தொழில்துறையினர் கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.
அவர் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு காரணங்களை முன்வைத்து நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்துவதை தவிர்க்கின்றார் என சுற்றுலாத்தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.