மருந்துத் துறையில் உள்ள பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகளைத் தீர்ப்பதற்கும் சரிசெய்வதற்கும் அர்ப்பணிப்புடன் செயல்படும் அனைத்து ஊழியர்களையும் ஊக்குவித்து பாதுகாப்பேன் என்று சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மருந்துத் துறை இன்று உலகில் அதிக இலாபம் ஈட்டும் தொழிலாகவும், ஒரு மோசடியாகவும் மாறிவிட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நாரஹேன்பிட்டவில் உள்ள ‘மெஹெவர பியச’ அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அரச மருந்தகக் கூட்டுத்தாபன அலுவலகத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட போது சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்தார்.
இதன்போது, நிறுவனத்தின் செயல்பாடுகளை மிகவும் முறையாகவும் வெளிப்படையாகவும் செயல்படுத்த நிர்வாக அதிகாரியுடன் நீண்ட கலந்துரையாடலும் நடத்தப்பட்டது.
மருந்து விநியோக வலையமைப்பு மற்றும் அதன் தற்போதைய செயல்பாடு, மருந்து கொள்முதல் செயல்முறை மற்றும் மருந்து விநியோகத் திட்டம் மற்றும் எதிர்காலத்தில் இந்த நடவடிக்கைகள் எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும் என்பது குறித்து சுகாதார அமைச்சர் நிர்வாக அதிகாரிக்கு அறிவுறுத்தல்களை வழங்கியதாகக் கூறப்படுகிறது.