அரச அதிகாரிகள் பொறுப்பு கூற வேண்டும் – யாழில் அமைச்சர் சந்திரசேகர்:

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் இடம்பெறும் சுண்ணக்கல் அகழ்வு நடவடிக்கைகளுக்கு அரச அதிகாரிகள் பொறுப்பு கூற வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதிகளில் சட்டவிரோதமான முறையிலும், வழங்கப்பட்ட அனுமதிகளுக்கு மேலதிகமாகவும் சுண்ணக்கல் அகழ்வுகள் இடம்பெறுவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகின்றனர்.

அந்நிலையில் கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், சுண்ணக்கல் ஏற்றி சென்ற கனரக வாகனங்களை பிடித்து சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

அதனை அடுத்து, சுண்ணக்கற்களை உரிய அனுமதிகளுடனேயே எடுத்து செல்வதாகவும் , கடந்த 14 ஆண்டுகளுக்கு மேலாக சுண்ணக்கல் வர்த்தகத்தில் தாம் ஈடுபட்டு வருவதாகவும், சிட்டி ஹாட்வெயாரின் உரிமையாளர் யாழில் ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் , சடடவிரோதமான முறையில் சுண்ணக்கல் அகழப்படுவதாக கூறப்பட்ட பகுதிகளுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை கடற்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று, சுண்ணக்கல் அகழப்பட்டு பாரிய பள்ளங்களாக காணப்பட்ட இடங்களை பார்வையிட்டனர்.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கடற்தொழில் அமைச்சர் கருத்து தெரிவிக்கும் போது, யாழில் இடம்பெறும் சுண்ணக்கல் அகழ்வு நடவடிக்கைகளுக்கும், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கும் அரச அதிகாரிகளே பொறுப்பு கூற வேண்டும்.

இது தொடர்பிலான விசாரணைகள் விரைந்து முன்னெடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *