அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இன்று:

அமெரிக்காவில் (USA) இன்று (05) ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பதை அறிய உலகமே ஆவலுடன் காத்திருக்கின்றது.

இந்தத் தோ்தலில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் (Kamala Harris) ஜனநாயகக் கட்சி சார்பிலும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குடியரசுக் கட்சி சார்பிலும் போட்டியிடுகின்றனா்.

அந்த நாட்டின் நேரப்படி இன்று காலை 7.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதனடிப்படையில் அணி மாறும் மாகாணங்களில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப் முன்னிலையில் இருக்கிறார்.

அமெரிக்காவின் 50 மாகாணங்களில் அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, நார்த் கரோலினா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகியவை அணி மாறும் மாகாணங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த 7 மாகாணங்களின் மக்கள், ஒருமுறை குடியரசு கட்சிக்கும், மறுமுறை ஜனநாயக கட்சிக்கும் மாறி மாறி வாக்களிக்கின்றனர்.

இந்த மாகாணங்களில் அட்லாஸ் இன்டல் என்ற நிறுவனம் கருத்துக் கணிப்பை நடத்தியது. இதன்படி அரிசோனாவில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்புக்கு 51.9% பேரும், ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலாவுக்கு 45.1% பேரும் ஆதரவு அளித்தனர்.

நெவாடாவில் ட்ரம்புக்கு 51.$% பேரும், கமலாவுக்கு 45.9% பேரும், நார்த் கரோலினாவில் ட்ரம்புக்கு 50.4% பேரும், கமலாவுக்கு 46.8% பேரும் ஆதரவு தெரிவித்தனர். இதர 4 மாகாணங்களிலும் ட்ரம்ப் முன்னிலையில் இருக்கிறார்.

அமெரிக்காவின் அயோவா மாகாணம் குடியரசு கட்சியின் கோட்டையாகக் கருதப்படுகிறது. இந்த மாகாணத்தில் இருமுறை ட்ரம்ப் வெற்றி பெற்று இருக்கிறார்.

ஆனால் தற்போதைய ஜனாதிபதி தேர்தலில் அயோவா மாகாணத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா முன்னிலையில் இருக்கிறார். இதுதொடர்பாக டெஸ் மொய்னஸ் ரிஜிஸ்டர் என்ற நாளிதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் கமலாவுக்கு 47% பேரும் ட்ரம்புக்கு 44% பேரும் ஆதரவு அளித்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிந்த உடன் அனைத்து மாகாணங்களிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். பெரும்பாலும் அன்றிரவே புதிய ஜனாதிபதி யார் என்பது உறுதி செய்யப்படும். இழுபறி நீடித்தால் ஓரிரு நாட்களுக்குப் பிறகே முடிவு தெரியவரும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *