அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்யா விடுத்துள்ள எச்சரிக்கை!

ரஷ்யா மீது உக்ரேன் நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நேட்டோ நீக்கினால் உக்ரேன் – ரஷ்ய யுத்தத்தில் நேட்டோ நேரடியாக களமிறங்குகின்றது என தாம் கருதி தாமும் சில முடிவுகளை எடுக்க நேரிடும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேட்டோ, அமெரிக்கா , ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் ரஷ்யா ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா , ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி, ஆயுத உதவிகள் அளித்து வருவதால், ரஷ்யாவுக்கு கடும் சவாலை உக்ரேன் தொடர்ந்தும் அளித்து வருகிறது.

இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் இந்தப் போர் தொடர்ந்து நீடித்து வருகிம் நிலையில், இந்தப் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் அண்மையில் அறிவித்தார்.
எனினும், ரஷ்ய பிராந்தியங்கள் மீது ஆளில்லா ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி உக்ரேன் தாக்குதல் நடத்தி வருகின்றது.

இந்த நிலையில், இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின், மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களை வைத்து தாக்குதல் நடத்தும் திறன் உக்ரேன் இராணுவத்திற்கு கிடையாது என்றும் செயற்கைகோள் மூலமான உளவுத் தகவல்களை பெறாமல் இவற்றை பயன்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா அல்லது நேட்டோ செயற்கைகோள்களை தான் உக்ரேன் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த ஏவுகணைகளுக்கு தேவையான சில அதிநவீன கருவிகள் நேட்டோ அமைப்பிடம் தான் உள்ளதாகவும் எனவே, இந்த போரில் நேட்டோ படைகள் நேரடியாக ஈடுபடுகிறதா அல்லது இல்லையா என்பதே முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஏவுகணைகளை உக்ரேன் பயன்படுத்த அனுமதித்தால், அது போரின் தன்மையை மாற்றும் எனத் தெரிவித்துள்ள புடின், அது நேட்டோ படைகள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகள் ரஷ்யாவுடன் நேரடியாக மோதுவதற்கு சமம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் வகையில் தகுந்த முடிவுகளை ரஷ்யா எடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *