பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை பெற்ற உதவித் தொகையில் சுமார் 500 மில்லியன் ரூபா பாதிக்கப்பட்டவர்களுக்குச் செலவிடப்பட்டுள்ளதாக கொழும்பு மறை மாவட்ட சமூக மற்றும் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்காக பல்வேறு தரப்பினரிடம் இருந்து பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்குக் கிடைத்த உதவித் தொகை எந்தவிதத்திலும் துஷ்பிரயோகம் செய்யப்படவில்லை என ஊடகவியலாளர் மாநாட்டை ஏற்பாடு செய்த அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த வலியுறுத்தியுள்ளார்
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலில் மிகவும் வங்குரோத்து நிலையில் உள்ளவர் எனவும் தனது வங்குரோத்து நிலையை மறைப்பதற்காக ஊடகங்கள் இவ்வாறான பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்காக பல்வேறு வர்த்தக சமூகங்கள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தரப்பினரால் கர்தினாலுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகை இதுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.