பிரித்தானியாவில், இன்று முதல் புதிய பிரெக்சிட் சுங்கக் கட்டுப்பாடுகள் அமுலுக்கு வருவதால், இறைச்சி, மீன் மற்றும் பால் பொருட்களின் விலைகள் அதிகரிக்க உள்ளன.
புதிய பிரெக்சிட் விதிகளின்படி, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து, குளிரூட்டப்பட்ட மற்றும் உறையவைக்கப்பட்ட இறைச்சி, மீன், பாலாடைக்கட்டி மற்றும் பிற பால் பொருட்கள் மற்றும் ஐந்து வகை பூக்கள் பிரித்தானியாவுக்கு இறக்குமதி செய்யப்படவேண்டுமானால், அவை, ஐரோப்பிய கால்நடை மருத்துவர் அல்லது ஆய்வாளரின் கையொப்பமிடப்பட்ட ஏற்றுமதி சுகாதார சான்றிதழ் ஒன்றுடன்தான் பிரித்தானியாவுக்குள் நுழையமுடியும்.
மேலும், ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல், இதே உணவுப்பொருட்கள் அதிகாரிகளால் எல்லையில் சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்பே பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படும்.
இதனால், அந்த உணவுப்பொருட்கள் பிரித்தானியாவின் பல்வேறு பாகங்களைச் சென்றடைய தாமதமாகும், பொருட்கள் தட்டுப்பாடும் ஏற்படும்.
நான்கு ஆண்டுகளுக்கு முன், இதேபோல், பிரித்தானிய ஏற்றுமதியாளர்கள், எல்லைகளில் சோதனை காரணமாக ஐந்து மடங்கு தாமதங்களை சந்தித்தது நினைவிருக்கலாம்.
பிரித்தானியாவின் தாவர, விலங்குகளின் பாதுகாப்புக்கும், அவற்றிற்கு தீங்கு செய்யும் பூச்சிகள் மற்றும் நோய்கள் பிரித்தானியாவுக்குள் நுழையாமல் தடுப்பதற்கும், பிரித்தானிய ஏற்றுமதியாளர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் இந்த கட்டுப்பாடுகள் அவசியம் என்கிறது பிரித்தானிய அரசு.
ஆனால், இதனால் ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தகம் செய்வதற்கான செலவு ஆண்டொன்றிற்கு 330 மில்லியன் பவுண்டுகள் அதிகரிக்கக்கூடும் என அரசு கணக்கிட்டுள்ளது. அதன் காரணமாக அடுத்த மூன்று ஆண்டுகளில் உணவுப் பொருட்களின் விலைகள் 0.2 சதவிகிதம் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.