2022 ஆம் ஆண்டு நாடு வங்குரோத்தடைந்த நிலையால் ஏற்பட்ட பொருளாதார சுனாமியை நாடாக நாம் எதிர்கொண்டோம். அதைவிடப் பாரதூரமான பொருளாதார சுனாமி தற்போது ஏற்படப் போகிறது என எதிர் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.
அன்று உருவெடுத்த வரிசை யுகத்தினால் அமைதியின்மை, இடர்பாடுகள் போன்றவற்றால் மக்கள் பல இன்னல்களை அனுபவித்தனர். இம்முறை அதைவிடப் பாரதூரமான ஆபத்தான பொருளாதார நிலைமை உருவெடுத்துள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியினது அரசாங்கம் நமது நாட்டின் ஏற்றுமதிகள் மீது 44% பரஸ்பர வரி விதித்துள்ளது. நமது நாடு அமெரிக்க இறக்குமதிப் பொருட்களுக்கு 88% வரி விதித்தமையே இதற்கு காரணமாகும். இந்தப் பிரச்சினையால், அமெரிக்காவுக்காவுக்கான நமது நாட்டின் ஏற்றுமதியும், அந்த ஏற்றுமதியை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும் கடும் சிக்கலை எதிர்கொள்கின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்த வரி விதிப்பால் நமது நாட்டுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும். நமது நாட்டின் 40% ஆடைகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகின்றன. இது தடைபடலாம். இந்த வரி ஏப்ரல் 9 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது. இந்த வரி உலகின் பல நாடுகளுக்கும் விதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரச்சினை ஏற்படுவதற்குப் பல மாதங்களுக்கு முன்னரே அரசாங்கத்திடம் இது குறித்து சுட்டிக்காட்டியிருந்தோம். இலங்கை அரசாங்கம் சர்வதேச வர்த்தகத் துறையைப் பற்றி நன்கு அறிந்த ஒரு குழுவை வொஷிங்டனுக்கு அனுப்பி உரிய தரப்புகளுடன் கலந்துரையாடலை முன்னெடுக்குமாறு நாம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தோம். ஆனால் அரசாங்கம் இதனை புறக்கணித்து, ஆணவம் காட்டி வருகிறது என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.