பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் 16ஆவது நாளாகவும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில் இப்பணிப்புறக்கணிப்பு காரணமாக பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் அனைத்துப் பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதனால் 50,000 பட்டதாரிகளால் திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் தங்களது பட்டப்படிப்பை நிறைவு செய்ய முடியாது போகலாம் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் துணைத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன பி.உடவத்த தெரிவித்தார்.
அத்தோடு, உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் பல்கலைக்கழக பட்டப்படிப்புகளுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது? போன்ற விபரங்கள் அடங்கிய பல்கலைக்கழக அனுமதிக் கையேடு வழங்கும் திட்டமும் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக தாமதமாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தேவையான யோசனைகளை கல்வி அமைச்சர் ஏற்கனவே அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளதாக பேராசிரியர் உடவத்த தெரிவித்தார்.
எவ்வாறாயினும், தமது கோரிக்கைகளுக்கு சாதகமான தீர்வுகள் வழங்கப்படும் வரை காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடரும் என தம்மிக்க எஸ்.பிரியந்த தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.