இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பங்களாதேஷ் 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் தொடரின் முதல் இரு போட்டிகளுக்குமான இலங்கை இளையோர் குழாத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் 19 வயதுக்கு உட்பட்ட அணிகளுக்கு இடையிலான ஆறு போட்டிகளைக் கொண்ட இளையோர் ஒருநாள் தொடர் எதிர்வரும் ஏப்ரல் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இதில் ஏப்ரல் 26 மற்றும் 28ஆம் திகதிகளில் கொழும்பு, சி.சி.சி. மைதானத்தில் நடைபெறவுள்ள முதல் இரு ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை இளையோர் அணியே தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பதினைந்து பேர் கொண்ட இலங்கை இளையோர் குழாத்திற்கு றோயல் கல்லூரி சகலதுறை வீரர் விமத் தின்சர தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். தின்சர ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்ட ஆசிய கிண்ண தொடரில் பங்களாதேஷுக்கு எதிராக சதம் ஒன்றை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் பருத்தித்துறை, யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரியைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் விக்னேஷ்வரன் ஆகாஷ் இளையோர் குழாத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் இலங்கை 17 வயதுக்கு உட்பட்ட அணிக்கு தேர்வாகி இருந்தார்.
அதேபோன்று யாழ்ப்பாணம் பரி. யோவான் கல்லூரியைச் சேர்ந்த வலது கை வேகப்பந்து வீச்சாளர் குகதாஸ் மாதுலனும் இலங்கை இளையோர் குழாத்தில் மீண்டும் இடம்பெற்றுள்ளார். 19 வயதுக்கு உட்பட்ட ஆசிய கிண்ண தொடருக்கான இலங்கை இளையோர் அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பங்களாதேஷ் இளையோர் அணிக்கு எதிரான இந்த இளையோர் ஒருநாள் தொடருக்கு 27 பேர் கொண்ட குழாம் ஒன்றுக்கு விளையாட்டுத் துறை அமைச்சரிடம் இருந்து தேர்வுக் குழுவுக்கு ஏற்கனவே ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்தக் குழாத்தில் இருந்து எஞ்சிய போட்டிகளுக்கு வீரர்களை தேர்வு செய்ய தேர்வுக் குழுவினர் எதிர்பார்த்துள்ளனர்.
இதனிடையே இலங்கை வரும் பங்களாதேஷ் 19 வயதுக்கு உட்பட்ட அணி இந்த இளையோர் ஒருநாள் தொடரில் ஆடுவதற்கு முன்னர் பயிற்சி போட்டி ஒன்றிலும் ஆடவுள்ளது. இந்தப் போட்டி எதிர்வரும் ஏப்ரல் 24 ஆம் திகதி கோல்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த பயிற்சிப் போட்டியில் ஆடுவதற்கு 14 பேர் கொண்ட அணி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு றோயல் கல்லூரியின் ரமிரு பெரேரா தலைவராக செயற்படவுள்ளார். இந்தப் பயிற்சிப் போட்டியில் வெளிப்படுத்தும் திறமை அடிப்படையில் ஏஞ்சிய போட்டிகளுக்கான அணித் தேர்வை மேற்கொள்ள தேர்வாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இலங்கை இளையோர் குழாம்:
விமத் தின்சர (தலைவர்) (றோயல்), துல்னித் சிகேரா (மஹானாம), விரான் சமுதித (மாத்தறை புனித சர்வேசியஸ்), திமத் மஹவிதான (திரித்துவ), கவிஜ கமகே (கிங்ஸ்வுட்), கித்ம விதானபதிரண (ஆனந்த), ரமிரு பெரேரா (றோயல்), ஆதம் ஹில்மி (திரித்துவ), தினுர தம்சத் (குருகுல), சாமிக்க ஹீனடிகல (மஹானாம), ரசித் நிம்சர (வத்தலை, லைசியம்), கே. மாதுலன் (யாழ். பரி யோவான்), வி. ஆகாஸ் (யாழ்ப்பாணம் ஹாட்லி), திஸ்ருஷ நவோத்ய (சாஹிரா), சனுஜ நின்துவ (குருநாகல் புனித ஆன்ஸ்).