நாட்டை மீட்டெடுக்க, ஏற்றுமதி சார்ந்த கல்வியே ஒரே வழி!

நாடு சுமார் 100 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன்பட்டிருக்கும் நேரத்தில், இதிலிருந்து மீள்வதற்கு ஏற்றுமதி சார்ந்த கல்வியே ஒரே வழி என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 152 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், புத்தளம், சிலாபம், புனித செபஸ்டியன் நவோதய கல்லூரிக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு  தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” தற்போது எமது நாட்டு மீனவர்களின் வீட்டில் இருக்கும் தங்கத்தை அடகு வைத்து அப்பணத்திற்கு எரிபொருள் வாங்கி மீனவத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறானதொரு ஒரு நிலை நாட்டில் முன்னேப்போதும் ஏற்பட்டதில்லை.

அமைச்சர்களான பெஸ்டஸ் பெரேரா மற்றும் ஜோசப் மைக்கல் பெரேரா ஆகியோரின் காலத்தில் கடற்றொழில் துறையின் பொற்காலம் உதயமானது. இவ்விரு அமைச்சர்களும் மீன்பிடித் தொழிலை போட்டி போட்டு அபிவிருத்தி செய்தாலும், தற்போது 18,000 ரூபாய்க்கு சிறிய படகுகளுக்கு நகைகளை அடகு வைத்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஸ்மாரட் கல்வியும், ஸ்மார்ட் விவசாயமும் இருப்பதைப் போல மீன்பிடித் தொழிலும் ஸ்மார்ட்டாக மாற வேண்டிய தேவையுள்ளது.
நாடு இன்று 100 பில்லியன் டொலர்வரை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கடன் பட்டுள்ளது. இதிலிருந்து நாட்டை மீட்டெடுக்க, ஏற்றுமதி சார்ந்த கல்வியே ஒரே வழியாகும். இதற்காக உயர்த்தரத்திலான கல்விக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *