இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், அரசியல் தீர்வற்ற வெறும் ‘நல்லிணக்கக் கொடியைக்’ காண்பித்து தம்மைத் தொடர்ந்து ஏமாற்றவேண்டாம் எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளடங்கலாக பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு எவ்வித தீர்வையும் பெற்றுத்தராத உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்மொழிவைத் தம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது எனத் தெரிவித்த அவர், அதில் சர்வதேச மேற்பார்வை மற்றும் புதிய நீதிமன்ற முறைமை உள்வாங்கப்படவேண்டியது அவசியம் என சுட்டிக்காட்டினார்.
அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாகாணசபைகளைப் பலப்படுத்துவது குறித்து ஆராய்வதுடன், அடுத்த புதிய பாராளுமன்றம் தெரிவாகி ஒரு வருடத்துக்குள் புதிய அரசியலமைப்பு உருவாக்க நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக வாக்குறுதியளித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் வடக்கு – கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு வியாழக்கிழமை மாலை 3.00 மணியளவில் கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பை கடந்த 13 ஆம் திகதி நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் அச்சந்திப்பு பிற்போடப்பட்டது. அதன்படி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஆஷு மாரசிங்க, நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோரும் வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களில் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், தவராஜா கலையரசன், ரெலோவின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.