பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று (19.12.2023) சந்தித்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
அப்போது மிக்ஜாம் புயல் கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்கீடு செய்யக் கோரியும், தென் மாவட்டங்களில் தற்போது பெய்த அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
இப்பாதிப்புகளை சீரமைத்திடத் தேவையான நிதியினை விரைந்து ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு கோரிக்கை மனுவினையும் (Memorandum) அளித்தார்.
மிக்ஜாம் புயல் கனமழையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது குறித்தும், புயல் மழையால் சாலைகள், பாலங்கள், பள்ளிக் கட்டடங்கள், அரசு மருத்துவமனைகள் போன்ற பொதுக் கட்டமைப்புகளும், மின்சார உட்கட்டமைப்புகளும், உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர் கட்டமைப்புகள் கிராம சாலைகள் போன்றவற்றுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், தமிழ்நாடு அரசு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டதால் பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் மிக விரைவாக இயல்பு நிலை திரும்பியது குறித்தும் முதலமைச்சர், பிரதமருக்கு எடுத்துரைத்தார்.