தேசிய பாடசாலைகளுக்கு 2,500 புதிய ஆசிரியர் நியமனங்கள்:

மாகாண மட்டத்தில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை விரைவில் தீர்க்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

மாகாண ஆளுநர்களுடன் நேற்று (12) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே கல்வி அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” தேசிய பாடசாலைகளுக்கு 2,500 புதிய ஆசிரியர் நியமனங்களை ஜூலை 03ஆம் திகதி வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன் படி, இரசாயனவியல், பௌதிகவியல், உயிரியல், கணிதம், தொழில்நுட்பம், சர்வதேச மொழிகள் ஆகிய பாடங்களுக்கு 2,100 ஆசிரியர் நியமனங்களையும்,2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆங்கில மொழிமூல உயர் டிப்ளோமா பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் 500 ஆசிரியர்களை நியமிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன் மூலம் தேசிய பாடசாலைகளில் குறித்த பாடங்களுடன் தொடர்புடைய ஆசிரியர் வெற்றிடங்கள் பெருமளவில் நீங்கும்” இவ்வாறு  அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், ஆங்கில மொழிமூல ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் தற்போது ஓய்வு பெற்ற ஆங்கில மொழிமூல ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கல்வி நிர்வாக சேவை மற்றும் ஆசிரியர் கல்வி சேவை ஆகியவற்றில் உள்ள உத்தியோகத்தர் பற்றாக்குறையை ஈடுசெய்யும் வகையில் துரித வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *