தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு அறவிடப்படும் கட்டணத்தை திருத்தியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பொது பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
தேசிய அடையாள அட்டையின் சான்றளிக்கப்பட்ட பிரதிக்கான கட்டணம் 2,000 ரூபாவாக இருக்க வேண்டும் என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தேசிய அடையாள அட்டைகளின் உண்மைத் தன்மையை சரிபார்ப்பதற்கான கட்டணம் ஆன்லைன் முறையில் சமர்பித்தால் ரூ.25 ஆகவும், பௌதீக ஆவணங்கள் மூலமாகவோ அல்லது ஆணையர் ஜெனரலுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய மின்னணு முறை மூலமாகவோ சமர்ப்பிக்கப்பட்டால் ரூ.500 ஆகவும் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தேசிய அடையாள அட்டை புகைப்படக் கலைஞராக பதிவு செய்வதற்கான கட்டணம் ஏற்கனவே 10,000 ரூபாவாக இருந்த நிலையில் அதற்கான கட்;டணத்தை 5000 ரூபாய் அதிகரித்து 15,000 ரூபாவாக மாற்றியமைக்க வேண்டுமென பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்தோடு, பதிவுச் சான்றிதழைப் புதுப்பிப்பதற்கான ஆண்டுக் கட்டணமான 2,000 ரூபாயை 3,000 ரூபாயாக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.