தொழிற்சங்கங்களின் கோரிக்கையோ அழுத்தமோ இன்றி வரலாற்றில் அரசாங்கமொன்றினால் அதிகூடிய வேதன அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், சுகாதார தொழிற்சங்கங்கள் பணிபுறக்கணிப்பில் ஈடுபடுவதை ஏற்க முடியாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்திற்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நிலையிலும் அரச சேவையை வினைத்திறனாக முன்னெடுத்தல், தகைமையுள்ள நபர்களை அரச சேவைக்கு ஈர்த்தல் மற்றும் அரச சேவையை ஊக்குவிப்பதற்காகப் பாதீட்டில் அரச ஊழியர்களின் அடிப்படை வேதனத்தை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதீட்டில் 06 முறைமைகளின் அடிப்படையில் வேதன அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அதன் பிரகாரம் மிகக் குறைந்த அடிப்படை சம்பளத்தை 15,000 ரூபாவினால் அதிகரித்தல், மேலதிக நேரக் கொடுப்பனவு அதிகரித்தல், விடுமுறை நாள் கொடுப்பனவு அதிகரித்தல், 80 சதவீதத்தினால் வருடாந்த வேதனத்தை அதிகரித்தல், முழுமையான வேதன அதிகரிப்பிற்கு அமைய ஓய்வூதிய கொடுப்பனவை அதிகரித்தல், உழைக்கும் போது செலுத்தும் வரி எல்லையை அதிகரித்தல் என்பவற்றை மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், குறித்த வேதன அதிகரிப்பானது அரச சேவையில் பெருமளவானவர்களினால் பாராட்டப்படுவதாகவும், அது தொடர்பில் புதிய அரசாங்கத்தின் ஆர்வத்தைப் பாராட்டுவதாகவும் அரச சேவை ஐக்கிய தாதியர் சங்க பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், தாதியர் சேவையில் தற்போது காணப்படும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதுடன், அதற்கான துரித தீர்வினை பெற்றுத்தருமாறு அரச சேவை ஐக்கிய தாதியர் சங்க பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
