18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பளை மத்திய கல்லூரி வீரர் வி. ராம்கி தங்கப் பதக்கம் வென்று வடமாகானத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
கொழும்பு, சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ரிட்ஸ்பறி சேர் ஜோன் டாபட் 91ஆவது சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டியின் மூன்றாம் நாளான நேற்று (15) கோலூன்றிப் பாய்தலில் 3.40 மீற்றர் உயரம் தாவியதன் மூலம் ராம்கி தங்கப் பதக்கத்தை வென்றெடுத்து அசத்தியுள்ளார்.
இப் போட்டியில் இரண்டாம், மூன்றாம் இடத்தைப் பெற்ற தென் பகுதி பாடசாலை வீரர்கள் 3.00 மீற்றர் உயரத்தை தாவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, போட்டியின் இரண்டாம் நாளன்று நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சுழிபுரம் விக்டோரியா கல்லூரி வீரர் ஏ. திலக்ஷன் (3.70 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும்,
18 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான 3000 மீற்றர் ஓட்டப் போட்டியை 11 நிமிடங்கள், 10.2 செக்கன்களில் நிறைவு செய்த என். அபிநயா வெள்ளிப் பதக்கத்தையும், வென்று சாதனை படைத்திருந்தனர்.