கொழும்பு துறைமுக மனித புதைகுழியில் இருந்து மூன்று மனித எலும்புக்கூடுகள் மீட்பு!

கொழும்பு துறைமுக மனித புதைகுழியில் இருந்து மூன்று மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு துறைமுகத்தில் முதலாவது மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குப் பின்னர், வானிலை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பள்ளங்களில் தண்ணீர் தேங்கியிருப்பதை அதற்கு முதல் நாள் காணக்கூடியதாக இருந்தது.

வெயில் மற்றும் மழையில் இருந்து பாதுகாப்பதற்காக வியாழக்கிழமை (30) முதல் கூடாரம் அமைத்து பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக மனித புதைகுழியில் இருந்து மூன்று மனித எலும்புக்கூடுகளை கண்டுபிடித்த தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் ராஜ் சோமதேவ தலைமையிலான ஆய்வாளர்கள் மேலும் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்படும் என நம்புகின்றனர்.

கடந்த ஜூலை மாதம் தற்செயலாக வெளிப்பட்ட குழியின் இரண்டு கட்ட அகழ்வில் குறைந்தது மூன்று முழுமையான எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

மூன்றாம் கட்டம் அகழ்வு பணி கடந்த திங்கட்கிழமை (27) ஆரம்பமானது. அதுவரை அகழ்ந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எல்லையில் தோண்டப்பட்ட இரண்டாவது குழியிலிருந்து புதிய எலும்புக்கூடுகள் எடுக்கப்பட்டன. முதல் குழியின் அகழ்வுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

புதைகுழியை கண்காணிப்பதற்கு வரலாறு காணாத கட்டுப்பாடுகளை விதித்துள்ள பொலிஸார், மதிய உணவு நேரத்திலும், அகழ்வாய்வு முடிந்த பின்னரும் மாத்திரமே அனுமதிக்கின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபை, காணாமல் போனோர் பற்றிய அலுவலகம், மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்தி மையம் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்ப ஒன்றியம் மற்றும் சட்டத்தரணிகள் மற்றும் ஊடகவியலாளர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *