மத்திய அரசு அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று அங்குள்ள விவசாயிகள் பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஆனால் மத்திய அரசு இதற்கு எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
அதனால், அனைத்துப் பயிர்களுக்கும் மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யும் சட்டம் கொண்டுவர வேண்டும் உட்படப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் விவசாய சங்கத்தினர் முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
விவசாய சங்கத்தினர், மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் முற்றுகைப் போராட்டத்தை வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி அன்று மேற்கொள்ள நாளை (11-02-24) முதல் ஹரியானாவில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டுச் செல்ல உள்ளனர்.
இந்த நிலையில், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கத்தார் அந்த மாநிலத்தில் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி, நாளை (11-02-24) முதல் வரும் 13 ஆம் தேதி வரை ஹரியானாவில் ஏழு மாவட்டங்களுக்கு இணைய வழி சேவையை துண்டிக்க உத்தரவிட்டுள்ளார்.
அதில், அம்பாலா, குருசேத்ரா, கைதால், ஜிந்த், ஹிசார், பதேஹாபாத், சிர்சா ஆகிய மாவட்டங்களில் இணைய சேவைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், செல்போனில் பேசுவதற்கான அழைப்புகளைத் தவிர இதர இணைய சேவைகளுக்கு வரும் 13 ஆம் தேதி காலை 6:00 மணி முதல் 13 ஆம் தேதி இரவு 11:59 மணி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.