2024 ஜூன் 7 ஆம் திகதி நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் , ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலுக்கு (ECOSOC) இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
189 உறுப்பு நாடுகளில் 182 வாக்குகளைப் பெற்று, 2025 ஜனவரி 1 முதல் மூன்று வருட காலத்திற்கு இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டது.
பிராந்திய நாடொன்றுக்குக் கிடைத்த இரண்டாவது அதிக வாக்குகளை பெற்று இலங்கை தெரிவாகியுள்ளது.
வெள்ளியன்று (07) நியூயோர்க்கில் நடைபெற்ற தேர்தலில், இலங்கை அங்கம் வகிக்கும் 189 உறுப்பு நாடுகளில் 182 வாக்குகளைப் பெற்று, பிராந்தியத்திலிருந்து 2ஆவது அதிகூடிய வாக்கு எண்ணிக்கையையும், ஒட்டுமொத்தமாக 7வது அதிக வாக்கு எண்ணிக்கையையும் பெற்றுள்ளது.
இலங்கை இதற்கு முன்னர் 1985 – 1989 மற்றும் 2006 – 2008 வரை ECOSOC க்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.
ECOSOC இன் 54 உறுப்பு நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 18 நாடுகளில் ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் இருந்து உஸ்பெகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் சவுதி அரேபியா ஆகியவை அடங்கும்.
வெளிவிவகார அமைச்சு மற்றும் வெளிநாட்டில் உள்ள இலங்கை தூதரகங்களின் ஒருங்கிணைப்புடன் நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர தூதரகம் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்ததாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.