யாழ்ப்பாணம் – அளவெட்டி பகுதியை சேர்ந்த ஒன்றரை மாத குழந்தை மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ள நிலையில் குழந்தையின் தாயாரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது;
நேற்றைய தினம் சனிக்கிழமை (03) குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பின்னர் குழந்தை அசைவற்றுக் கிடந்ததாக குழந்தையின் தாய் குழந்தையை அளவெட்டி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்.
குழந்தையை அங்கிருந்து தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு மாற்றியபோது, குழந்தை உயிரிழந்துள்ளது.
குழந்தையின் உடலில் காயங்கள் காணப்பட்டமையால், உட்கூற்று பரிசோதனை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (04) முன்னெடுக்கப்பட்டதில், குழந்தையின் கைகள் மற்றும் கால்களில் முறிவு, தலையில் அடிகாயங்கள் , காதிலும் மெல்லிய கம்பியினால் துளையிட்ட அடையாளங்கள் உள்ளிட்டவற்றுடன் உடலில் கண்டல் காயங்களும் கண்டறியப்பட்டுள்ளன.
இந்நிலையில், குழந்தையின் மரணம் இயற்கை மரணம் அல்ல என உடற்கூற்று பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குழந்தையின் தந்தை வெளியூரில் தங்கியிருந்து வேலை செய்வதாகவும், தாயின் பராமரிப்பிலேயே குழந்தை இருந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸார் குழந்தையின் தாயாரை பொலிஸ் பாதுகாப்பில் எடுத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.