நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பும் வேளையில் சிலர் சீர்குலைக்க முயற்சிப்பதாகவும், அரச சேவையாளர்களுக்கு இவ்வருடத்தில் மீண்டும் சம்பள அதிகரிப்பு வழங்க முடியாது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஆனால் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டதில் அதற்கான நிதியை ஒதுக்க முடியுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த பொருளாதார நெருக்கடியை அடுத்து அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமற்போன வேளையில், 5 இலட்சம் அரச ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்க வேண்டும் பலர் கூறிய போதும் தான் அதைச் செய்யவில்லை எனவும், VAT வரியை 18% இற்கு கொண்டு வந்து சம்பள அதிகரிப்பை வழங்கியிருப்பதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, இனியும் மக்கள் மீது வரிச்சுமையை சுமத்த முடியாது எனவும் வலியுறுத்தினார்.
“சட்டத்தை மதிக்கும் நாடு” எனும் தொனிப்பொருளில் வெல்லவாய பொது விளையாட்டரங்கில் நேற்று (6) நடைபெற்ற ஊவா மாகாண சமூக பொலிஸ் குழு உறுப்பினர்களின் வலுவூட்டல் செயலமர்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி, போதைப்பொருள் பாவனையாளர்களை கைது செய்ததன் பின்னர், மனித உரிமை பற்றிப் பேசும் சில சட்டத்தரணிகள் அவர்கள் சார்பில் ஆஜராக முன்வருவது ஆச்சரியமளிப்பதாக சுட்டிக்காட்டினார்.
பயங்கரவாதத்தை விட போதைப்பொருள் கடத்தல் நாட்டுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாடு பொருளாதார அச்சுறுத்தலில் இருந்து மீண்டுவரும் இவ்வேளையில் போதைப்பொருளின் அச்சுறுத்தலில் இருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு அனைவரின் ஆதரவும் அவசியம் எனவும் கூறினார்.
எதிர்கால சந்ததியினர் போதை பாவனைக்கு பலியாகும் பட்சத்தில், நாட்டை கட்டியெழுப்ப அரசாங்கம் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வீணாகிவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்ட ‘யுக்திய’ நடவடிக்கைக்கு விசேட பங்களிப்பை வழங்கிய ஊவா மாகாண சமூக பொலிஸ் குழு உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகளை தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
“90 களில் விடுமுறையில் சுவிட்சர்லாந்துக்கு சென்றிருந்தேன். நான் என் தந்தையின் நண்பர் வீட்டில் தங்கியிருந்தேன். நான் அந்த வீட்டிற்குச் சென்றபோது, இன்று மாலை உங்களைப் பார்க்க போலீஸ்காரர் ஒருவர் வருவார் என்று சொன்னார். ஏன் என்று கேட்டேன். இல்லை, வெளிநாடுகளில் இருந்து நமது கிராமத்திற்கோ, நகரத்திற்கோ யாராவது வந்தால், பொலிஸாருக்கு அறிவிக்கும் வழக்கம் இங்கு உள்ளது என்றார்.
இந்த திட்டம் அந்த நாடுகளில் தினமும் செயல்பாட்டில் உள்ளது. வெளிநாடுகளில் இருந்து யாராவது வந்தால், அவர்களைக் கண்காணிக்கின்றனர். இதனால் அந்த பகுதிகளுக்குள் தீவிரவாதிகள் நுழைவது கடினமாகும். போதைப்பொருள் கொண்டு வருவதும் கடினம். இன்று அந்த சமூகக் காவல் முறையை ஆரம்பித்துள்ளோம். இங்கிலாந்திலும் இந்த முறை நடைமுறையில் உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் யார் இருக்கிறார்கள் என்பது காவற்துறைக்குத் தெரியும். இந்தத் திட்டம் பல ஐரோப்பிய நாடுகளிலும் செயற்படுத்தப்படுகிறது.
ஆனால் இன்று லண்டன் உட்பட பல ஐரோப்பிய நகரங்களில் இந்த முறைமை சரிவைக் கண்டுள்ளது. அதனால்தான் எல்லா இடங்களிலும் திருட்டு நடக்கிறது. போதைப்பொருள் கடத்தலும் நடக்கிறது. இவ்வாறு சட்டம் ஒழுங்கைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதும் ரிஷி ஷுனக் அரசின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதே அரசின் முதல் கடமையாகும் என்பதை அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். 2021-2022 ஆம் ஆண்டுகளில் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது. வீடுகள் அழிக்கப்பட்டன, வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டன. இவ்வாறு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தபோது, அதனை சீரமைக்க வேண்டியிருந்தது.
நாட்டில் நடந்த அழிவுச் செயல்களுக்குப் பின்னால் போதைப்பொருள் வியாபாரிகளும் இருந்தனர். எனவே, நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும்போது போதைப்பொருளையும் கட்டுப்படுத்த வேண்டியிருந்தது. போதைப்பொருள் தடுப்புக்காகவே இந்த சமூக பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது, இது வெற்றி பெறுமா இல்லையா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இன்று இது ஒரு வெற்றிகரமான திட்டமாக மாறியுள்ளது.
இன்று பல பகுதிகளில் போதைப்பொருள் காரணமாக திருட்டு நடக்கிறது. போதைப் பொருள் வாங்க சிலர் திருடுகிறார்கள். இந்நிலை தொடர அனுமதிக்க முடியாது. இன்று ஆப்கானிஸ்தானில் இருந்து போதைப்பொருள் நம் நாட்டிற்கு வருகிறது.